மலேசிய தேசிய மனித உரிமைகள் சங்கம் (ஹக்காம்), நாட்டில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புப் பேச்சு மற்றும் விரோதப் போக்கு குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிராகத் தாங்களே நீதி வழங்க முயலும் தனிநபர்களின் நடவடிக்கை கவலையளிப்பதாக ஹக்காம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 31 ஜூலை வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, வெறும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஹக்காம் இந்த விவகாரத்தைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ எம் .இராமச்செல்வம் கூறினார். ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாப்பது மற்றும் மியான்மருக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவது தன்னார்வமாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவது, சமூகத்தில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு சாதாரணமாகி வருவதைக் காட்டுகிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகச் செயல்பட முடியாது. குற்றச்சாட்டுகள் எதுவாகினும் அவை சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்; ஒரு முழு சமூகத்தையும் குறிவைக்கக் கூடாது.
வன்முறைச் சம்பவங்கள்: ஜோகூரில் ரோஹிங்கியா சமூகத்தினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் இத்தகைய விரோதப் போக்கின் ஆபத்தான விளைவை உணர்த்துகிறது. இத்தகைய வன்முறைகள் நிபந்தனையின்றி கண்டிக்கப்பட வேண்டும் . அகதிகளின் மனித உரிமை. ரோஹிங்கியா மக்கள் பத்தாண்டுகளாகத் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளைச் சந்தித்துவருகின்றனர். மலேசியாவில் அவர்கள் இருப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமையையோ கண்ணியத்தையோ பறித்துவிடாது.
பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதைக் கைவிட்டு, ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் உரிய சட்ட வழிகளில் புகார் அளிக்க வேண்டும் எனவும் ஹக்காம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, எளிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தலைவர் டத்தோ ஸ்ரீ எம். இராமச்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



