ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவை வழங்கும் பிரிவாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் திகழ்கிறது. மொபைல் மற்றும் அகண்ட அலைவரிசை, பொழுதுபோக்கு, கிளவுடு கம்பியூட்டிங், கிளவுடு கேமிங், ஸ்டோரேஜ், ஸ்மார்ட் ஹோம் கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பொருட்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, 52 கோடியே 44 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 885 கோடி ரூபாயை வருவாய் ஈட்டிய நிலையில், வரி, வட்டி உள்ளிட்டவற்றுக்குப் பிறகு 30 ஆயிரத்து 49 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இந்நிலையில், தொடக்க நிலை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளதாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், தனது கருத்தை ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தொடக்க நிலை பங்குகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், தலா 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 27 கோடி பங்குகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள், தங்களது பங்குகளை இந்த தொடக்க நிலை பங்கு வெளியீட்டில் விற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு நடவடிக்கை மூலம் நிர்ணயிக்கப்படும் விலை அடிப்படையில், பங்கு எண்ணிக்கை இறுதிசெய்யப்படும் என்று கூறப்படுகிறது. தொடக்க நிலை பங்கு வெளியீடு மூலம், 30 ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவின் மிகப்பெரும் தொடக்க நிலை பங்கு வெளியீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 27 ஆயிரத்து 870 கோடி ரூபாயை திரட்டிய நிலையில், அதனை ஜியோ பிளாட்ஃபார்ம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பங்குகள் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட உள்ளன.
இதன்மூலம், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதனம் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் ஜியோ பிளாட்ஃபார்ம் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

