மலேசியா முழுவதும் எஸ்பிஎம் , எஸ்டிபிஎம் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) 2026ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 901,680 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மித்ரா, கல்வி அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.இத்திட்டத்தின் மூலம் 7,897 எஸ்பிஎம் மாணவர்களும் 793 எஸ்டிபிஎம் மாணவர்களும் பயனடைவதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், தமிழ் மொழிப் பாடத்தில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதற்கு உதவுதல், தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான கல்விசார் ஆதரவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.இதன் மூலம் மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான ஆதரவையும் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்ட சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.


தமிழ்மொழி என்பது தேர்வுக்கான ஒரு பாடம் மட்டுமல்ல; அது மொழி, பண்பாடு, அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றும், எதிர்காலத் தலைமுறையினருக்காக அதனைப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனிடையே, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 300 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்ற தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுப் பட்டறை நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா பிஏசியின் ஹோரிசோன் அரங்கத்தில் நடைபெற்றது.மாணவர்களின் தேர்வுத் தயார்நிலை, தன்னம்பிக்கை, தமிழ்மொழிப் பாடத் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த இப்பட்டறை அமைந்தது. கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, மனிதவள அமைச்சின் செயல்பாட்டுப் பிரிவுக்கான துணைச் செயலாளர் சுதேக்னோ பின் அஹ்மட் பெலோன், மித்ரா தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன் நாயர் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.



