Last Updated:
ஸ்பெயின் நாட்டில் வீட்டுவசதிப் பிரச்னை தொடர்பான மக்கள் பேரணியில் மோதல் காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாடு முழுவதும் தற்போது கடுமையான வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் வரலாறு காணாத வாடகை உயர்வு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலைமைக்கு உடனடித் தீர்வு காணக் கோரி, நேற்று (அக்டோபர் 5) பார்சிலோனா நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாடகைதாரர்கள் சங்கத்தினர் (Sindicat de Llogateres) ஒன்றிணைந்து பிரமாண்ட பேரணியை நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பிரமாண்ட கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.
முதலில் அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் பேரணியின் முடிவில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் பார்சிலோனா பங்குச்சந்தை அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்றனர். அங்கு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோசோஸ் (Mossos d’Esquadra) பிராந்தியக் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், தெருக்களில் தடுப்புகளுக்கு தீ வைத்தனர்.
Tens of thousands protested across Spain after parliament rejected housing measures to ban evictions, freeze rents and regulate short-term rentals https://t.co/KrqaBzLJjv https://t.co/12SfrpUbNL
— Reuters (@Reuters) October 3, 2026
இதையடுத்து கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தவும், கூட்டத்தைக் கலைக்கவும் காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், ‘ஃபோம்’ (Foam) ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். முன்னதாக, கடந்த மாதம் மாட்ரிட் நகரில் 87 வயது மூதாட்டி ஒருவர் அவரது வாடகை வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயின் முழுவதும் மக்கள் கொதித்தெழுந்தனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான அரசு கொண்டு வந்த அவசர வீட்டுவசதிச் சட்டத் திருத்தங்களை, நாடாளுமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இந்த அரசியல் முட்டுக்கட்டை காரணமாக, பிரதமர் சான்செஸ் ஸ்பெயினில் வருகிற நவம்பர் 29, 2026 அன்று முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். அரசாங்கம் உடனடியாக வாடகை உயர்வுக்குக் கடிவாளம் போட வேண்டும் மற்றும் அவசர நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதே அங்குள்ள பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


