வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம் மும்பையில் நடந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதாம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம் , நாட்டின் ஜிடிபி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
குறிப்பாக ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி உயர்வு, விநியோகம் தட்டுப்பாடு அதனால் ஏற்பட்டுள்ள பணவீக்க பாதிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இந்திய டாலர் கையிருப்பு குறித்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஈரான் போர் தொடங்கி 8 மாதங்கள் முடிந்துள்ளது. இதனால் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என பல இன்னல்களை இந்தியா சந்தித்து வரும் சூழலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதம் என உயர்ந்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வீட்டு கடன், வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரபோகிறது. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். அது உயர்த்தப்பட்டுள்ளதால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டியையும் உயர்த்தும். ஃபுளோட்டிங் ரேட் எனப்படும் மிதக்கும் வட்டி விகிதத்தில் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் உங்களின் வட்டி விகிதம் உயரும். நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் இது தொடர்பாக உங்களுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும்.
கடனுக்கான வட்டியை வங்கிகள் எவ்வளவு உயர்த்தியுள்ளதோ அதை பொறுத்து நம் மாதாந்திர இஎம்ஐ தொகையும் உயரும். இது நம் மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, தீபாவளி , தசரா பண்டிகை வேறு வருகிறது, இந்நிலையில் வட்டி உயர்வு என்பது கோடிக்கணக்கான மக்களுக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம் தான்.
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தான் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தியது அதனையே பின்பற்றி இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை உயர்த்தி அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தியுள்ளது.

