Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறைப்படி நேரம் கேட்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (6ஆம் தேதி) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பேரணியை தொடங்கி, தேர்தல் ஆணையம் நோக்கி சென்றனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திருமாவளவன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அருகேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை இங்கே தடுத்து நிறுத்திவிட்டனர். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஏன் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ஆகாஷ்வாணி வளாகத்தில் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு சுமார் 8.30 மணி அளவில் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில அரசியல் கட்சிகள் குறிப்பாக, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழுவினர் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க விரும்புவதாக ஊடகச் செய்திகள் வாயிலாக இன்று முற்பகுதியில் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது.
Earlier today, it came to the Election Commission’s attention through media reports that certain political parties—specifically, some Members of Parliament (MPs) along with their delegations—wished to meet the Commission. The Commission wishes to clarify that, as of 4:00 PM today, no political party had formally requested a meeting with the Election Commission through its representatives. Subsequently, around 4:00 PM, information was received from the Delhi Police that a delegation of MPs, led by the Leader of the Opposition, Rahul Gandhi, wished to meet the Commission to submit a memorandum: Election Commission of India
— ANI (@ANI) October 6, 2026
எனினும், இன்று மாலை 4:00 மணி வரை, எந்தவொரு அரசியல் கட்சியும் தங்கள் பிரதிநிதிகள் மூலமாகத் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க முறைப்படி கோரிக்கை விடுக்கவில்லை என்பதை ஆணையம் தெளிவுபடுத்த விரும்புகிறது. அதனைத் தொடர்ந்து, மாலை 4:00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், ஒரு மனுவைச் சமர்ப்பிப்பதற்காக ஆணையத்தைச் சந்திக்க விரும்புவதாக டெல்லி காவல்துறையிடமிருந்து தகவல் பெறப்பட்டது” என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


