Last Updated:
தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வரும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் அன்றாட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அருகே அவர்கள் சென்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது சகாக்கள் நடத்தி வரும் அன்றாட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2014-ஆம் ஆண்டிலிருந்தே இந்த நாடகம் தொடர்ந்து வருகிறது. இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?
ஜனநாயகத்தில், மக்களுக்குச் சேவை செய்தால் மக்களின் அங்கீகாரத்தைப் பெறலாம். ஆனால், அந்த அங்கீகாரத்தைப் பெறத் தவறும்போதெல்லாம் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அவமதிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் மன்னிப்பு கோரும்போது, நீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்று கூறி அதையும் தாக்குகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தையும் அரசாங்கத்தையும் ‘திருடர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள். இத்தகைய நடத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது. சமூகத்திற்கும் நாட்டிற்கும் சுயநலமின்றித் தொடர்ந்து சேவை செய்து வரும் மோடி மற்றும் பாஜக தொண்டர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இந்த நாடகத்தை நிறுத்துமாறு ராகுல் காந்தியைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சேவையில் ஈடுபட்டால் மட்டுமே மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்; வெறும் நாடகங்கள் மட்டும் போதாது.
#WATCH | Delhi | On INDIA Bloc MPs’ protest, Union Minister Kiren Rijiju says, “…My second request to Rahul Gandhi and the Congress party is to stop propagating the narratives of anti-India forces. Foreign powers and anti-India elements constantly push narratives to weaken India, discredit its constitutional institutions, and mislead its people. The Congress, at the very least, should not echo these narratives…The country is moving towards becoming a ‘Viksit Bharat’ (Developed India). The nation has changed. Simply being born into a certain family will no longer make you Prime Minister. The youth of the country have changed; with a new mindset, they are marching forward under Modi-ji’s leadership to build a developed India by 2047. Why stage dramas by attacking the Election Commission, the Supreme Court, and constitutional institutions? This charade will not work. If the Congress wishes to regain any remaining public mandate, it should focus on service. Narratives on social media won’t suffice…”
— ANI (@ANI) October 6, 2026
இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கருத்துக்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நான் இரண்டாவது வேண்டுகோளாக வைக்கிறேன். இந்தியாவை வலுவிழக்கச் செய்யவும், அதன் அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குலைக்கவும், மக்களைத் தவறாக வழிநடத்தவும் வெளிநாட்டு சக்திகளும் இந்தியாவுக்கு எதிரான கூறுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
குறைந்தபட்சம் காங்கிரஸாவது இத்தகைய கருத்துக்களை எதிரொலிக்காமல் இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நமது நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தினாலேயே இனி ஒருவரைப் பிரதமராக்க முடியாது. புதிய மனநிலையுடன், 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மோடியின் தலைமையில் இளைஞர்களும், நாட்டு மக்களும் முன்னேறிச் செல்கின்றனர்” இவ்வாறு தெரிவித்தார்.


