கோலாலம்பூர்:
மலேசியாவின் கிழக்குக் கரை ரயில் திட்டத்தின் (ECRL) வணிக ரீதியிலான நடவடிக்கைகளுக்கான பயணச் சீட்டு விலைகள் இம்மாதத்திற்குள் அறிவிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விற்பனை தொடங்கப்படும் என மலேசியா ரயில் லிங்க் (MRL) நிறுவனம் அறிவித்துள்ளது. ECRL-இன் முதல் கட்ட வணிகச் சேவைகள் வரும் டிசம்பர் பாதியில் தொடங்க எதிர்பார்க்கப்படுகின்றன.
ECRL பயணச் சீட்டின் விலைகள் விமானக் கட்டணத்தை விடக் குறைவாகவும், பேருந்துக் கட்டணத்தை விடச் சற்று அதிகமாகவும், மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்படும் என MRL தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ தார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை 12 இருவழிச் சேவைகளும், வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 14 இருவழிச் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.
கோத்தா பாரு முதல் கோம்பாக் வரையிலான முதற்கட்டப் பணிகள் செப்டம்பர் மாத நிலவரப்படி 98.16 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் 519 கி.மீ தூரத்தைக் கொண்ட கோம்பாக் – கோத்தா பாரு பாதையை ECRL ரயில் 3 மணிநேரம் 19 நிமிடங்களில் வெற்றிகரமாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



