கோலாலம்பூர்:
பேராக், செமோரில் உள்ள பிரபல இடைநிலைச் சமயப் பள்ளி ஒன்றில் தங்களது இரு மகன்களும் ஆசிரியராலும் விடுதி மாணவர்களாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகத் தாய் ஒருவர் போலிசில் இரு வேறு புகார்களைப் பதிவு செய்துள்ளார்.
தனியாளாகத் தனது பிள்ளைகளை வளர்த்து வரும் நூருல் அஸ்வானி அகமட் (43) எனும் அம்மாது இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தனது படிவம் 6 பயிலும் மூத்த மகன் தேர்வு அறைக்குக் கைப்பேசி கொண்டு வந்த காரணத்திற்காக ஆசிரியர் ஒருவரால் 6 முறை முகத்தில் பலமாக அறையப்பட்டதாகத் தெரிவித்தார்.

“ஆசிரியர் தாக்கியதில் என் மூத்த மகனின் தாடைப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. வலியாலும் அதிர்ச்சியாலும் அவனால் தேர்வுத் தாளைக் கூட எழுதி முடிக்க முடியாமல் போனது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 5 அன்று பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த என் 17 வயது இளைய மகனை, சக மாணவர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மொட்டை அடிக்க முயன்றுள்ளனர்” என்று, , பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயார் நூருல் அஸ்வானி அகமட் கூறினார்.
இளைய மகன் தற்காப்புக்காகப் போராடிய போது, முகத்தில் குத்தப்பட்டுத் தீயணைப்புக் கருவியின் கூர்மையான பகுதியில் மோதித் தலை பிளந்து இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். படுகாயமடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும், தாயைத் தொடர்பு கொள்ள அனுமதிக்காமலும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள இப்போ மாவட்டப் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முஹம்மது நஜீப் ஹம்ஸா, குற்றவியல் சட்டம் பிரிவு 323-இன் கீழ் (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்) இரு சம்பவங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
The post “என் மகனின் தாடையில் காயம்; 6 முறை அறைந்த ஆசிரியர்”: தனியாளாகப் போராடும் தாயாரின் உருக்கமான புகார்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

