International
oi-Nantha Kumar R
துபாய்: ”எனக்கு சாவை கண்டு பயமில்லை. விமானத்தை விபத்தில் சிக்க வைப்பது தான் விருப்பமாகவும், நோக்கமாகவும் இருந்தது” என்று கைதான ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே தான் ஓமன் துணை விமானிக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பழைய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

துபாய் – டெல்அவிவ் ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார். விமானத்தை கடத்தி விபத்தில் சிக்கி வைப்பது தான் அவரது நோக்கமாக இருந்தது. இருப்பினும் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் உயிர் தப்பினர்.
ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விமான கடத்தல் முயற்சி மற்றும் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி துணை விமானி ஹமாம் அல் ஹமாமிக்கு எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பங்கேற்ற இஸ்ரேல் அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர். இதற்கிடையே தான் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி அளித்த வாக்குமூலத்தில், ”எனக்கு சாவை கண்டு பயமில்லை. என்னுடைய ஒரே குறிக்கோள் மற்றும் விருப்பம் என்பது விமானத்தை விபத்தில் சிக்க வைப்பது தான்” என்று கூறியுள்ளாராம்.
அதுமட்டுமின்றி அவர் தனது இளமை காலத்தில் பெரும்பகுதியை சிரியாவில் கழித்துள்ளார். சிரியா என்பது அவரது தாய் பிறந்த நாடாகும். அங்கு தான் அவர் பயங்கரவாதத்தை நோக்கி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஓமன் துணை விமானிக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பழைய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா நாட்டின் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதனை ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் காவல்துறையுடன், நாட்டின் பாதுகாப்பு முகமை இந்த விசாரணையை தொடங்கி உள்ளது. திடீரென்று ஆஸ்திரேலியா இந்த விசாரணையில் இறங்கி இருப்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
அது என்னவென்றால் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமானி கடந்த 2014ல் ஆஸ்திரேலியாவில் இருந்து மாணவர் விசா பெற்றுள்ளார். 2015 முதல் 2017 வரை ஆஸ்திரேலியாவில் பயின்றதாகவும், அதன்பிறகு நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு எங்கும் அவர் படிக்காததால் மாணவர் விசாவிற்கான தகுதியை இழந்ததோடு, 2019ல் அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2015 முதல் 2017 காலக்கட்டத்தில் தான் அவர் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது பயங்கரவாத கருத்துகளால் அவர் ஈர்க்கப்பட்டாரா? என்பது தொடர்பாக அந்த நாட்டு விசாரணை அமைப்புகள் விசாரிக்க தொடங்கி உள்ளன.




