Last Updated:
தற்போது வரை விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 86 சதங்களை விளாசியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 55 சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி.
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை எத்தனை சதங்களுடன் நிறைவு செய்வார் என்பது குறித்தும், அவரது சமீபத்திய உலக சாதனைகள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, விராட் கோலி தனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் மொத்தம் 98 சதங்களை எட்டுவார் என்று கணித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற உலக சாதனையை கோலி எட்ட மாட்டார் என்றும், ஆனால் 98 சதங்களுடன் அவரது சர்வதேச பயணம் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 38-வது வயதில் அடியெடுத்து வைக்கும் விராட் கோலி, ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2027 ஒருநாள் உலகக்கோப்பையே தனது கடைசி பெரிய தொடராக இருக்கும் என்பதை அவர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். தற்போது வரை விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 86 சதங்களை விளாசியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 55 சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி.
திருவனந்தபுரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 55-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அவர் ஏற்படுத்தினார்.
2025 அக்டோபரில் குமார் சங்கக்காரவின் ரன் எண்ணிக்கையைக் கடந்த கோலி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தொடர்கிறார்.
இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 796 புள்ளிகளுடன் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இந்திய அணியின் சுப்மன் கில் (816 புள்ளிகள்) நீடிக்கிறார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை மட்டுமே விளையாட திட்டமிட்டுள்ள சூழலில், விராட் கோலி மேலும் 12 சதங்கள் அடித்து ஆகாஷ் சோப்ராவின் கணிப்பான 98 சதங்களை எட்டுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


