கோலாலம்பூர்:
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்து, இதுவரை தகவல்கள் ஏதுமின்றி மாயமானதாகக் கருதப்பட்ட 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பிறகு உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மலேசியா திரும்பியுள்ளார்.
நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘மலேசியா சோலிடாரிட்டி: ஃபேமிலீஸ் இன் ஹோப்’ (Masfih) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மணிவண்ணன் ரெத்தினம் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
குறித்த நபர் கத்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தகவலைப் பதிவு செய்துள்ளார்.
“37 நாட்கள் நீடித்த பதட்டமான நிலைக்கு பிறகு ஒரு மலேசியர் உயிருடன் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைந்திருப்பது மிகுந்த நிம்மதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. இது மாயமானவர்களின் எண்ணிக்கையை 55-லிருந்து 54 ஆகக் குறைத்தது மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நீண்டகாலப் போராட்டத்திற்கு நல்லதொரு முடிவை எட்டச் செய்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.



