India
oi-Vishnupriya R
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆசிரியர் பணிக்காக தொடர்ந்து 27 ஆண்டுகளாக தேர்வெழுதி வந்த நபர் தனது 59 ஆவது வயதில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரவுத் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சர்மா (59). இவர் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்காக தொடர்ந்து தேர்வு எழுதி வந்தார். இதுவரை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 6 முறையும் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வை 4 முறையும் எழுதியுள்ளார்.
இந்த தேர்வுகளில் பாஸ் செய்து 6 முறை நேர்காணலுக்கும் அவர் சென்றுள்ளார். ஆனாலும் அவருக்கு பணி கிடைக்கவில்லை. Final list ல் அவரது பெயரும் இடம் பெற்றதில்லை. இதற்காக அவர் சோர்ந்து போகவில்லை.
படிப்பை தூக்கி போட்டுவிட்டு அடுத்த வேலையையும் அவர் பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகும், அவர் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தி அடுத்த தேர்வுக்கு தயாராகி வந்தார்.

நியமன கடிதம்
இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த நேர்காணல் இல்லாத ஒரு தேர்வில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி லக்னோவில் நடந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து பணி நியமன கடிதத்தை பெற்றார். அவருக்கு சமஸ்கிருத ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.
அரசு ஆசிரியர் பணிக்காக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த சர்மா, தனியார் பள்ளிகளிலும் கடந்த 27 ஆண்டுகளாக சமஸ்கிருதம், இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும், இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சர்மா ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார். அவரிடம் படிக்கும் மாணவர்களும் அவரது ஊக்கத்தையும் உழைப்பையும் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.
கேரளா சம்பவம்
கேரளாவை சேர்ந்த ஜெயதேவன் என்பவர் தனது 20ஆவது வயதில் இருந்து அரசு பணி தேர்வுகளை எழுதத் தொடங்கினார். வறுமை, குடும்பச் சூழல் இருந்த போதிலும் அவர் பலமுறை தேர்வு எழுதி முயற்சியை கைவிடவில்லை, 30 ஆண்டுகள் தொடர் உழைப்புக்கு பிறகு தனது 63 ஆவது வயதில் நில அளவையர் பணியை பெற்றார்.
ராஜஸ்தானிலும் சாதனை
ராஜஸ்தான் மாநிலத்தில் சிவசரண்யாதவ் என்ற முதியவர், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார் 1968 ஆம் ஆண்டு முதல் 32 ஆண்டுகள் தேர்வு எழுதினார். தனது 77 ஆவது வயதில் அதாவது 2000 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்தார்.
கர்நாடகாவிலும் கலக்கல்
கர்நாடகா மாநிலத்தில் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து 24 முறை தோல்வியை சந்தித்த சிவராஜ் , 25 ஆவது முறை மாநில அளவிலான உதவி ஆணையர் தேர்வில் வென்று அரசு அதிகாரியாக அசத்தியுள்ளார். கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் என்ன சாதனை வேண்டுமானாலும் புரியலாம் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. நீங்களும் நம்பிக்கையுடன் லட்சியத்தை அடைய உழையுங்கள்!


