வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: யூபிஐ ,ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் சிக்கலா? மக்களே கவனம்..!!
நாடு முழுவதும் வரும் திங்கள் , செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களும் வங்கிகள் இயங்காது. வங்கி கிளைகள் , அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது என்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே பின்வரும் 4 முக்கிய விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது.
தொடர் ஸ்டிரைக் காரணமாக வங்கிகள் இயங்காது எனவே மக்கள் நேரடியாக வங்கி கிளைகளில் பெறும் சேவைகளை பெற முடியாது. எனவே முன்கூட்டியே திட்டமிட்டு வேலைகளை முடித்து கொள்ளுங்கள் என அனைத்து பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: பொதுமக்களுக்கு தடையில்லாமல் வங்கி சேவைகள் கிடைக்க ஏதுவாக பொதுத்துறை மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையான (செப்டம்பர் 27 ) நாளை முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது அவசரமான வங்கி பணிகளை நாளை முடித்து கொள்ளுங்கள் இல்லை என்றால் வியாழன் வரை காத்திருக்க வேண்டும்.
யூபிஐ, டிஜிட்டல் சேவைகள் : யூபிஐ, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் வாலட்டுகள் போன்ற ஆன்லைன் வங்கி சேவைகள் எப்போதும்போல் தடையின்றி 24 மணி நேரமும் செயல்படும். எனவே மக்கள் போனில் உள்ள பேங்கிங் செயலிகள் மூலம் பணம் அனுப்புவது , யூபிஐ பயன்படுத்துவது ஆகியவற்றை தொடரலாம். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. கடன் செலுத்துவதாக இருந்தால் கூட ஆன்லைனிலேயே செலுத்தலாம்.
ஏடிஎம்: ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம்போல இயங்கும். வேலைநிறுத்த நாட்களில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏடிஎம்களில் போதுமான பணத்தை நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வழக்கமாக ஒரு மாதத்திற்கு இத்தனை முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற விதியை இந்த 3 நாட்களுக்கு மட்டும் தளர்த்தியுள்ளன. எனவே தடையில்லாமலும் அபராத அச்சம் இல்லாமலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் மற்றும் பிற ஏடிஎம் சேவைகளையும் பெறலாம்.
தங்க நகை கடன்: தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது முடியாது. எனவே அவசர தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டும் என்றால் நாளை வங்கி வேலை நாள் என்பதால் நாளையே வேலையை முடித்து கொள்ளுங்கள். அதே போல அடகு வைத்த நகையை மீட்க முடியாது. நாளை அதை செய்யவில்லை என்றால் வியாழன் வரை காத்திருக்க வேண்டும்.
வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 90% வங்கி ஊழியர்களை உள்ளடக்கிய ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை , ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சீரான அகவிலைப்படி போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடக்கிறது.

