இந்தியாவுடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில், இழுவைப் படகுகள் மூலம் எமது கடலுக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீன்வளங்களை அள்ளிச் செல்லும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று அரசாங்கத்திடம் கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(23) நடைபெற்ற ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்யும் போது சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எமது கடற்பரப்புகளில் இழுவைப் படகுகளில் வந்து பலவந்தமாக எமது கடலைச் சுரண்டி, மீன் வளங்களை எடுத்துச் செல்கின்றனர். இந்த ஒப்பந்தங்களில் இந்த இழுவைப் படகுகள் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளனவா? எமது மீனவர்கள் மட்டுமன்றி இலங்கையர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் ஆயுதங்களுடன் வருகின்றனர். அண்மையில் அவர்களின் இழுவைப் படகில் இழுத்துச் செல்லும்போது எமது மீனவர்களும் சிக்கியுள்ளனர். இதனை நிறுத்துமாறு கூறுகின்றோம். நீங்கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணி ஒப்பந்தங்களைச் செய்கின்றீர்கள். ஆனால், இந்த விடயத்தில் ஒப்பந்தங்களில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா எனக் கேட்கிறேன்” என்றார்.

