International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 5 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். போலீஸ் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானை பொறுத்தவரை எப்போதுமே தீவிரவாதத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வரும் ஒரு நாடு. அதிலும் குறிப்பாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் நிலையில், அது இந்தியாவுக்கு பெரிய தலைவலியாக மாறுகிறது. இப்போது அதே எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாகிஸ்தானே கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மோசமான தாக்குதல்
மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மசூதி மீது மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலைப்படை
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் மசூதி மீது மோதியதை தொடர்ந்து மிக பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மசூதி கடுமையாக சேதமடைந்ததுடன், அருகில் இருந்த போலீஸ் அலுவலகங்களின் வெளிப்புற சுவரும் இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் போலீஸ் வளாகத்துக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த மோதலில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மசூதியில் தொழுகைக்காக வந்திருந்தவர்கள் என மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்
சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. தாக்குதல் நடைபெற்ற பகுதியிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர், தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பாகிஸ்தான் அதிபரும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தான் வடமேற்கு பகுதியில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் கான்வாயை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து நேற்று பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் அரசு படைகள் நடத்திய அதிரடி ஆபரேஷனில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தாலிபான்
இந்த தாக்குதலுககு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் பாகிஸ்தான் தாலிபான் என்று அழைக்கப்படும் டிடிபி அமைப்பு தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. ஏனென்றால் சமீப காலமாகவே போலீசார் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் உயிரிழந்தனர். இப்படி பாகிஸ்தானில் நடந்த பல தாக்குதல்களுக்கு அவர்கள் மூளையாக செயல்பட்டுள்ளனர்.

