Digital Gold : இனி யாரையும் ஏமாற்ற முடியாது.. கிராமுக்குக் கிராம் கணக்கு வரனும்!
தங்கம் மீதான ஆசை இந்தியர்களுக்கு எப்போதும் குறையாது என்பதற்கு ஏற்ப, எளிதாகக் குறைந்த விலைக்கு எங்கெல்லாம் தங்கத்தை வாங்க முடியுமே மக்கள் அங்குப் பணத்தை கொட்டுகின்றனர். இப்படிக் கடந்த சில வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் தங்கம் முதலீடு மீது இந்திய ரிசர்வ் வங்கியும், சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
டிஜிட்டல் கோல்டு மூலம் ஒருவர் 10 ரூபாய்க்குக் கூட தங்கத்தை வாங்க முடியும் என்பதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் பிட்டெக் நிறுவனங்கள், கோல்டு ஆப்-கள் வாயிலாக முதலீடு செய்து வந்தனர். இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு செபி டிஜிட்டல் கோல்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை, இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு எவ்விதமான உத்தரவாதமும் அரசால் கொடுக்க முடியாது என தெரிவித்தது.

இதனையடுத்து பலர் டிஜிட்டல் கோல்டு வாயிலாக முதலீடு செய்வதை நிறுத்தினாலும், பலர் இதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு தற்போது செபி மற்றும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து டிஜிட்டல் கோல்டு முதலீடு சந்தை மீதான கட்டுப்பாடுகள், விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்து ஆலோசனை செய்து வருகிறது.
இதில் முக்கியமாக ஒரு டிஜிட்டல் கோல்டு தளத்தில் 1,234.56 கிலோ அளவிலான தங்கத்திற்கு முதலீடு செய்யப்பட்டால், இதற்கு இணையான உலோக தங்கத்திற்கு இருப்பு காட்ட வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.
இதைவிட முக்கியமாக டிஜிட்டல் கோல்டு சேவை தளத்தை ஆர்பிஐ மற்றும் செபி இணைந்து கண்காணிக்கும் திட்டத்தையும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இப்புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நிர்வாக முறைகளின் தொடர்பான ஆலோசனைகள் இப்போது துவங்கியுள்ள நிலையில் எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.
இந்த திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சகம், பல்வேறு அமைப்புகள், நிர்வாக குழுக்கள், உயர்மட்ட அதிகாரிகள் முதல் செபி, ஆர்பிஐ வரையில் கருத்துக்களைக் கேட்டு உள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மக்களுக்கு இதில் முதலீடு செய்ய எளிதான ஒரு வழியை பாதுகாப்பான முறையில் உருவாக்கும் முயற்சியில் மத்திய நிதியமைச்சகம் இறங்கியுள்ளது.
2025ல் செமி பல டிஜிட்டல் கோல்டு தளங்கள் தங்களிடம் போதுமான தங்க இருப்பு இல்லாமலேயே முதலீட்டை பெறுவதாக கூறி மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது.
இதேபோல் இந்த டிஜிட்டல் கோல்டு முதலீடு என்பது தங்கப் பத்திரம், ETF போன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு கிடையாது என்பதையும் விளக்கியது.
செபி உத்தரவுக்கு பிறகும் பல பின்டெக் நிறுவனங்கள் டிஜிட்டல் கோல்டு திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில் இத்துறையின் மதிப்பு என்பது 3 பில்லியன் டாலராக உள்ளது. 3 பில்லியன் டாலர் எனில் 28,776 கோடி ரூபாயாகும். இதேபோல் டிஜிட்டல் கோல்டு முதலீட்டுச் சந்தையில் சராசரி முதலீட்டு அளவு 100 ரூபாயாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

