Last Updated:
கூடுதல் பணம் அளித்தால் மட்டுமே ஓட்டுநர்கள் சவாரியை ஏற்றுக்கொள்வதாக பயணிகளிடம் இருந்து தொடர் புகார் எழுந்த நிலையில், ஆன்லைன் டாக்சி நிறுவனங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்கும்படி ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ஓலா, உபர், ரேபிட்டோ போன்ற நிறுவனங்கள் டாக்சி முன்பதிவின்போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரைவாக டாக்சி கிடைக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ போன்ற அம்சங்களை தங்களது செயலியில் புதிதாக சேர்த்தன.
அதன்பின், கூடுதல் பணம் அளித்தால் மட்டுமே ஓட்டுநர்கள் சவாரியை ஏற்றுக்கொள்வதாக பயணிகள் தரப்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. அதைத்தொடர்ந்து, சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்குமாறு ஓலா, உபர் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் டாக்சி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tips தொகையைச் செலுத்தாவிட்டால் சவாரி கிடைக்காது என்று நுகர்வோர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பதால் முன்கூட்டியே டிப்ஸ் வழங்கும் முறையை நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரச் செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார். மேலும், பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஓட்டுநரின் சேவைக்குப் பயணிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் ‘டிப்ஸ்’ வழங்கிக் கொள்ளலாம் என்றும் நிதி கரே கூறியுள்ளார்.


