International
oi-Vigneshkumar
டெல்லி: உலகின் மிக முக்கிய கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறி வருகிறது. பல்வேறு வளரும் நாடுகளும் இதில் இணைய ஆர்வம் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானும் கூட இந்த அமைப்பில் சேர மிக பெரிய முயற்சி எடுத்து வருவதாகவும் இருப்பினும் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக பாகிஸ்தானால் பிரிக்ஸ் அமைப்பில் சேர முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பிரிக்ஸ்
2006ம் ஆண்டு வெறும் 4 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரிக்ஸ் இன்று 11 நாடுகளுடன் உலகின் மிக பெரிய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்ட கூட்டமைப்பாக விரிவடைந்துள்ளது. இந்த அமைப்பில் இணைய அண்டை நாடான பாகிஸ்தான் நீண்ட காலமாக முயன்று வரும் போதிலும், அதை கைகூடவில்லை.
பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கத்துக்கு தயாராகி கொண்டிருந்த 2023ம் ஆண்டிலேயே அதில் இணைவதற்கான முயற்சியை பாகிஸ்தான் தொடங்கியது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரிக்ஸ் அமைப்பு BRICS+, என்ற விரிவடைந்த கூட்டமைப்பு உருவானது. இந்த சூழலில் பாகிஸ்தானும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தது. ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
பாகிஸ்தான்
பிரிக்ஸில் சேர கோரிக்கை விடுத்த பாகிஸ்தானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்தபோது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆரம்பத்தில் இதை பெரிதுபடுத்தவில்லை. பிரிக்ஸில் சேருவதற்காக பாகிஸ்தான் இன்னும் முறையான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றே தெரிவித்தது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நிலைமை மாறியது. 2024ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உறுப்பினர் பதவியை பெறுவதற்காக பாகிஸ்தான் முறையாக விண்ணப்பித்தது.
அப்போது ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாகவும், குறிப்பாக அந்த ஆண்டில் பிரிக்ஸ் தலைமை பொறுப்பை ஏற்கவிருந்த ரஷ்யாவின் ஆதரவை நாடுவதாகவும் தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பு வளரும் நாடுகளின் முக்கியமான கூட்டமைப்பு என்றும் அதில் உறுப்பினராக இணைவதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு பாகிஸ்தான் பங்களிக்க முடியும் என்றும் அவும் அவர்கள் கூறினர்.
என்ன காரணம்
மேலும், பிரிக்ஸ் உடன் தொடர்புடைய பொருளாதார நிறுவனங்களுடனும் பாகிஸ்தான் நெருக்கத்தை அதிகரிக்க முயன்றது. 2025-ம் ஆண்டில் பிரிக்ஸ் ஆதரவு நியூ டெவலப்மண்ட் வங்கியில் சுமார் 580 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பாகிஸ்தான் வாங்கியது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் மீதான தனது நிதி சார்பை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா நிலைப்பாடு
பிரிக்ஸ் நாட்டில் சேர ஒரு நாடு விண்ணப்பிக்கும்போது, ஏற்கனவே உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு உறுப்பினர் நாட்டின் ஆதரவும் முக்கியமானதாகிறது. பாகிஸ்தான் இந்த அமைப்பில் இணைய இந்தியாவின் நிலைப்பாடு முக்கிய தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு பிரிக்ஸில் உள்ள நிலைப்பாடு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் காரணமாக, பாகிஸ்தான் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.
இந்தியாவின் 2026 தலைமை பொறுப்பின் கீழ் தற்போது பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என 11 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கு செல்லும்.



