கனகராஜா சரவணன்
நிலத்தில் வீழ்ந்து கிடந்த, பாம்பு விஷம் தீண்டியதாகச் சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்விப் பயின்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்த நாவற்பழத்தை எடுத்துண்டுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததை அடுத்து, அவரை உடனடியாகக் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதாலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


