நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த வறட்சியான காலநிலையால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு
இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக பாதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பவுசர் வாகனங்கள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு, குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

