Tamilnadu
oi-Halley Karthik
திருவாரூர்: கர்நாடகாவிலிருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறட்சியடைந்தருக்கின்றன. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா டெல்டா நிலைமை குறித்து பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ராஜா தனது x பக்கத்தில், “இன்று வறண்டு கிடக்கும் வடுவூர் ஏரியைப் பார்க்கும்போது, அதன் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்க நான் பார்த்துப் பார்த்துச் செய்த பணிகள் அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன. இதே நாளில், கடந்த ஆண்டு பசுமை எழில் கொஞ்ச, நீர் நிறைந்து, பறவைகள் புடைசூழ வடுவூர் ஏரி காட்சியளித்த அந்த ரம்மியமான தோற்றம் இன்னும் கண்முன்னே நிற்கிறது.

டெல்டாக்காரரான #திமுக தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், மக்களின் மனமும் இந்த மண்ணும் குளிர்ந்திருந்தன! ஆனால் இன்று? மன்னார்குடி வடுவூர் ஏரி வறண்டு கிடக்கிறது. வயல்களில் விவசாயம் இல்லை. சவளக்காரன், கீழநாலாநல்லூர், சித்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் குடிப்பதற்குக்கூட போதுமான தண்ணீர் இல்லை. பெண்களும் முதியவர்களும் குடங்களுடன் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டாவில் குடிநீருக்கே தட்டுப்பாடு என்றால், அது வெறும் பருவநிலைப் பிரச்சினையல்ல; நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி! ஏரிகள் வறண்டால் விவசாயம் மட்டும் அழிவதில்லை. நிலத்தடி நீர் குறையும்; கால்நடைகள் பாதிக்கப்படும்; பறவைகள் விலகும்; ஒரு பகுதியின் ஒட்டுமொத்த வாழ்வாதாரச் சூழலே சிதைந்துவிடும்.
நீர் நிறைந்து செழித்திருந்த டெல்டாவை, ஒரே ஆண்டில் குடிநீருக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள். இந்த மண்ணின் தாகமும் மக்களின் தவிப்பும் ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?
வடுவூருக்கு நீர் வேண்டும்.
வயல்களுக்கு உயிர் வேண்டும்.
மக்களுக்குத் தடையற்ற குடிநீர் வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களது அன்பிற்குரிய காங்கிரஸ் கூட்டாளிகளை அழைத்து கர்நாடகத்திலிருந்து சட்டரீதியாக நமக்குரிய நீரை உடனடியாகப் பெற்றுத் தருவதோடு, ஏரிகளையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரித்து, #டெல்டா வின் நீராதாரங்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்டாவின் வறட்சி
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் போதுமான அளவுக்கு வராததால் சரியான நேரத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதானல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய குறுவை சாகுபடி 2-3 லட்சம் ஏக்கராக சுருங்கியிருக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் டெல்டாவில் எங்குமே தண்ணீர் இல்லை என்பதுதான். வழக்கமாக டெல்டா மாவட்டங்கள் கேரளாவை போல இருக்கும். எங்கு பார்த்தாலும் குளம், குட்டை, வாய்க்கால்கள், ஆறு என.. தண்ணீர் மயமாக இருக்கும். ஆனால், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா முற்றிலும் வறட்சியாக இருக்கிறது.
சில இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக வலசை வர வேண்டிய வெளிநாட்டு பறவைகளை ஒன்று கூட பார்க்க முடியவில்லை. மொத்தமா 4-5 மாவட்டங்களில் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது. நாளை மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கூட.. திறக்கப்படும் தண்ணீரின் அளவு போதாது என்று விவசாயிகள் ஏமாற்றம் தெரிவித்திருக்கின்றனர்.

