படாங் பெசாரில் உள்ள வழக்கு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக விசாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு பெர்லிஸ், படாங் பெசாரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
படாங் பெசார், பெர்லிஸில் உள்ள ஓர் எாிபொருள் நிலையத்தில், மானிய விலையிலான பெட்ரோலைச் சேமித்து வைப்பதற்காகத் தனது காரில் கூடுதல் தொட்டியை வைத்திருந்ததாக நம்பப்படும் 29 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
வாராந்திர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எட்டு அமலாக்க அதிகாரிகளால் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக பெர்லிஸ் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் இயக்குநர் ரோஹைடா ஹாசன் தெரிவித்தார்.
அவர் ஓட்டிவந்த வாகனத்தைச் சோதனையிட்டதில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த எாிபொருள் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“தோராயமாக 258.70 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள 130 லிட்டர் பெட்ரோலையும், அந்த வாகனத்தையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,” என்று புல்லட்டின் டிவி3 (Buletin TV3) தளம் அவாின் கூற்றை மேற்கோளிட்டுள்ளது.
கட்டுப்பாட்டுப் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
