அரசின் கொள்கை உருவாக்கத்தில் AI : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடியின் 5 முக்கிய உத்தரவுகள்..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. விரைவில் நமக்கான கொள்கைகளை வகுப்பதிலும் ஏஐ முக்கிய பங்காற்ற உள்ளது. பிரதமர் மோடி அரசு அதிகாரிகள் குறிப்பாக துறை சார்ந்த செயலாளர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு துறை செயலாளர்களுடன் தனது இல்லத்தில் மூன்றாவது உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார். உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நிர்வாகம் தொடர்பான எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், பிரதமர் ஐந்து முக்கிய அணுகுமுறைகளை செயலாளர்களும் அதிகாரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1. ஏஐ தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அரசு நிர்வாகத்தில் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டு கொண்டுள்ளார்.தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு ஆகியவை அரசு கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. ஏஐ இதனை எளிதாக்குகிறது. எனவே செயலாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் அதே சமயம், இதன் செயல்பாட்டில் மனிதர்களின் தலையீடு மிக முக்கியம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். AI-இன் தொழில்நுட்ப திறனையும் மனித அனுபவத்தையும் இணைப்பதற்கான புதிய வழிகளை ஆராய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
2. ஜென் ஸீ இளைஞர்கள்: அரசு கொள்கைகளை உருவாக்கும்போது, அரசு துறைகளுக்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்பை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதாவது ஜென்ஸீ இளைஞர்களுடன் தொடர்பில் இருந்தால் தான் வருங்கால குடிமக்களாக மாற போகும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
3. துறை ரீதியான தடைகள்: அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக செயல்படும் சைலோ (Silos) கலாச்சாரம் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது ஒரு நிறுவன ரீதியான பிரச்சனை மட்டுமல்ல, ஒரு மனநிலை சார்ந்த பிரச்சனை , அதிகாரிகள் பொறுப்புணர்வோடு, அரசு ஒட்டுமொத்தமாக ஒரு அமைப்பாகச் செயல்படும் உணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
4. டேட்டா: டேட்டா எனப்படும் தரவுகளை, எதிர்காலத்திற்கான ஒரு தேசிய சொத்தாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தரவுகளை சேகரிக்கவும் நிர்வகிக்கவும் அரசு அதிக முதலீடு செய்வதாக தெரிவித்தார். இருப்பினும், துறை ரீதியான ஒருங்கிணைப்பின்மை காரணமாக அதன் முழுமையான பயன் கிடைப்பதில்லை எனவே தரவுகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவற்றை சிறப்பாக பயன்படுத்தவும் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
5.நீண்ட கால இலக்கு: அதிகாரிகள் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் புள்ளிவிவரங்களை தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், மூத்த அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் இளைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இடையே ஒரு நல்ல குழு மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாகவே ஏஐ பயன்பாடு, ஜென் ஸீ இளைஞர்களுடன் தொடர்பு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தருகிறார். அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட ஜென் ஸீ இளைஞர்களுடன் அமைச்சர்கள் தொடர்பில் இருக்க வேண்டும், சமூகவலைதளங்களை பாசிடிவாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கி இருந்தார்.

