கோலாலம்பூர்: சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் (EC) உறுதி செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹருன் வெளியிட்ட அறிக்கையில், அத்தொகுதியின் காலியிடம் குறித்து நேற்று மக்களவை சபாநாயகர் ஜோஹரி அப்துல் தங்களுக்குத் தெரிவித்ததாகக் கூறினார். கூட்டாட்சி அரசியலமைப்பின் 54(1) பிரிவின் அடிப்படையில், தற்காலிக காலியிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று மக்களவை சபாநாயகர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
“அதன்படி, பி.104 சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது,” என்று அது கூறியது. மே 2018 முதல் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த வோங், கடந்த புதன்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை ஜோஹாரியிடம் ஒப்படைத்ததாகக் கூறி, நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார். காலியிடத்திற்குத் தயாராவதற்கு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு மூன்று வேலை நாட்கள் அவகாசம் அளிக்கும் நோக்கிலேயே தனது ராஜினாமா செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னர் 2013 முதல் 2018 வரை கெலானா ஜெயா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய வோங், தனது ராஜினாமா குறித்த விவரங்களை நேற்று வரை வெளியிட வேண்டாம் என்று அவரும் ஜோஹாரியும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். சிறப்புத் தொகுதி ஒதுக்கீடுகளை நிர்வகிக்கும் MyKhas இணையதளத்தை அணுகுவதிலிருந்து சமீபத்தில் தடுக்கப்பட்ட மூன்று PKR நாடாளுமன்ற உறுப்பினர்களில் வோங்கும் ஒருவர். மற்ற இருவர் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில். மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங். முன்னாள் PKR தலைவர்களான ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தற்போது தலைமை தாங்கும் பெர்சாமா கட்சியின் தொடக்க விழாவில் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் மே மாதம் கலந்துகொண்டிருந்தனர்.



