ஸ்மார்ட்போன் வாங்குவதை தள்ளிப் போடும் இந்தியர்கள்! சீன நிறுவனங்களுக்கு பெரிய அடி! ஆனா கெத்து காட்டும் ஆப்பிள்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் பல சீன நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தியாவில் விற்கப்படும் சில முன்னணி பிராண்டுகள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. மெமரி சிப் விலை அதிகரிப்பால் மொபைல் ஃபோன்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோரின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. ஆனால் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி தங்களுடைய இடத்தை தக்கவைத்துள்ளன.
ஜூன் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 11.1% குறைந்து 3.32 கோடியாக உள்ளது. சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2026-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 7.9% குறைந்து 6.42 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

மெமரி சிப் விலை அதிகரிப்பால் “ஆவரேஜ் செல்லிங் பிரைஸ்” என்று சொல்லப்படும் ஸ்மார்ட் போனின் சராசரி விலையும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் சந்தையின் மதிப்பு 3.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் எந்தெந்த பிராண்டுகள் விற்பனை சரிவில் உள்ளன என்பதை பார்ப்போம். விற்பனை அடிப்படையில் பார்க்கும்போது விவோ முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த முறை விவோ ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையும் 13.9% சரிந்துள்ளது. ஒப்போ 8.5%, சியோமி 10%, ரியல்மி 14.2%, போக்கோ 12.3% குறைந்துள்ளது.
iQOO போன்களின் விற்பனை கடுமையாக சரிந்து 61 சதவீதத்தை எட்டியுள்ளது. மோட்டரோலா ஃபோன்கள் 8.9%, ஒன் பிளஸ் 2.5% விற்பனை சரிவை சந்தித்துள்ளன, இதில் கூறப்பட்டுள்ள ஒரு சில பிராண்டுகள் எந்த நியூ மொபைலை அறிமுகம் செய்தாலும் போட்டி போட்டுக் கொண்டு அந்த பிராண்ட் பிரியர்கள் வாங்குவார்கள்.
ஆனால் தற்போதைய விலை அதிகரிப்பு இதற்கு தடையாய் அமைந்துள்ளது. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சாம்சங் மற்றும் ஆப்பிள் பிராண்டுகள் தொடர்ந்து தங்களுடைய சந்தை பங்கை தக்க வைத்துள்ளன. 0.4 சதவீதம் வரை சாம்சங் விற்பனை அதிகரித்துள்ளது. ஆப்பிள் விற்பனை 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீன நிறுவனங்கள் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பதால் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது கடினமாகியுள்ளது. 100 டாலருக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் 74.3% வரை குறைந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இன்னும் 15 சதவீதம் வரை ஸ்மார்ட்போன் விற்பனை சரியக்கூடும் என்று இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் கணித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த விற்பனை 12.8 கோடி முதல் 13 கோடி வரை குறைய வாய்ப்புள்ளது.
ஒரு வேலை நிறுவனங்கள் இதை ஈடுகட்ட தள்ளுபடிகளை வழங்கினால் விற்பனையை ஓரளவுக்கு சரி செய்ய முடியும். இல்லாத பட்சத்தில் மீண்டும் ஃபோன் வாங்குவதை மக்கள் தள்ளி போடும் வாய்ப்புள்ளதாகவே ஐடிசி நிறுவனத்தின் சீனியர் ரிசர்ச் மேனேஜரான உபாசனா ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

