Last Updated:
கேரளாவில் காப்பிச் செடிகளைப் போலக் காட்டுப்பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில்… குளுகுளு க்ளைமெட்டில் காப்பிச் செடிகளைப் போலக் கஞ்சா செடிகளை விதைத்து, சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வளமான மண்ணில் செழிப்பாக வளர்ந்த இந்த கஞ்சா செடிகள் காற்றில், கஞ்சா வாடையை பரப்பி வனத்துறையினரின் மோப்பத்தில் சிக்கின. ரோந்து சென்ற அதிகாரிகளுக்கு அந்த வாடை கடும் சந்தேகத்தை உண்டாக்க விடிந்ததும் வனப்பகுதியில் தேடுதலில் இறங்கினர்.
அதில் வனப்பகுதியின் கிழக்கே உள்ள நிலத்தில் செழித்து வளர்ந்திருந்த கஞ்சா செடிகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 4 அடி உயரத்திற்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் வளர்ந்த கஞ்சா செடிகள் வனப்பகுதியின் ஓர் எல்லை வரை, பரவி கிடந்தன. மர்ம நபர்கள் யாரோ இந்த கஞ்சா செடிகளை விதைத்து நுணுக்கமாகக் கவனித்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து 1,400 கஞ்சா செடிகளை கைப்பற்றி வனத்துறையினர் சம்பவ இடத்திலேயே அவற்றைத் தீயிட்டு முழுமையாக அழித்தனர். யாருக்கும் அஞ்சாமல் இந்த கஞ்சா விவசாயத்தை ரகசியமாகச் செய்து வந்த குற்றவாளிகளை, தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
கஞ்சா செடிகளை வளர்த்து காய வைத்து பொட்டலம் போட்டு விற்றார்களா? அல்லது கீரை போல உறவி மூட்டை கட்டி கைமாற்றி விட்டார்களா? என்ற கோணங்களில் விசாரணை நீடிக்கின்றன. அதில் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


