சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், புதிய பெயரிலான திட்டங்கள் மற்றும் அதற்கான நிதிகள் குறித்து அறிவித்தார். குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் மாணவர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பில், ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப் திட்டம், இரண்டாயிரம் கோடி ரூபாயில் வெற்றி மடிக்கணி என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விளையாட்டு பாடவேளை நாள்தோறும் ஒரு மணிநேரம் இடம்பெறும் என அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், வெற்றி வீடு திட்டம் என்ற பெயரில் கூரை வீட்டுக் குடும்பங்களுக்கான அலகுத் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் சேவைக்காகவும், உதவி மையங்கள் அமைக்கவும் 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு விநியோகம் செய்ய 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் கீழ் நலிவுற்ற கைம்பெண், ஆதரவற்ற பெண், திருநர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, கால்நடைகள் காப்போம் என்ற கால்நடை காப்பீட்டுத் திட்டத்திற்கு 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் 10 ஆயிரம் தகுதியான பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள் வழங்கப்படும் என்றும், அதற்கு 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே போன்று, அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், அடிப்படை காப்பீடு 5 லட்சம் ரூபாயில் இருந்து ஏழரை லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.
இதே போன்று, குறிப்பிட்ட நோய்களுக்கு 12 லட்சம் ரூபாயும், அரிய நோய்களுக்கு 15 லட்சம் ரூபாயும் காப்பீடு வழங்கப்படும் என்றும், இதற்கு 838 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அரசு மானியம் வழங்கப்படும் என்றும், அதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 5 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் மதிப்பில், 20 ஆயிரம் பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
