Last Updated:
பாகிஸ்தானில் 30 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அதன் நிர்வாகி ரிஸ்வான் ஹனிப் வீடியோவில் ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானில் மர்ம நபர்களால் 30-க்கும் மேற்பட்ட லஷ்கர் – இ- தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு கடந்த, 2008ல், மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, தேடப்பட்டு வந்த லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் மூத்த நிர்வாகி ரிஸ்வான் ஹனிப் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும், பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவல்கோட், முசாபராபாத், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதி இதுபோன்ற கொலைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.


