Last Updated:
இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். அதில் அபிஷேக் – சாதனா இருவரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் IAS அதிகாரி எனக்கூறி அப்பாவி நபரை திருமணம் செய்து தங்க நகைகளுடன் முதலிரவில் எஸ்கேப்பான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவருக்கு சோசியல் மீடியா மூலம் புடான் மாவட்டத்தின் சதேதி கிராமத்தைச் சேர்ந்த சாதனா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அபிஷேக்கிடம் பழகியவர் ஒருகட்டத்தில் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆஹா நமக்கு ஐஏஎஸ் அதிகாரி மனைவியா? ஆனந்தமாக இருக்கிறதே? கடவுள் கைவிடவில்லை என துள்ளிக் குதித்தவர், சாதனாவிடம் சரணடைந்து விட்டார்.
இந்நிலையில், இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். அதில் அபிஷேக் – சாதனா இருவரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அன்றிரவு சாதனா வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது குடும்பத்தினர் ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளைப் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உண்ட கையோடு திருமண இரவில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த சாதனா, அவர் கண் அயர்ந்து தூங்கியதும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த நகைகளை செட்டாக தூக்கிக்கொண்டு வரட்டா மாமே என தப்பி ஓடிவிட்டார்.
விடிந்ததும் மனைவி எங்கே? என தேடிய அபிஷேக்கிற்கு நகையுடன் அவர் ஓடியது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஆட்களை அனுப்பி சாதனாவின் ஊருக்குள் விசாரிக்க, அவர் ஒரு கேடி பெண் என்றும், அவரது குடும்பமே அதற்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்து உடைந்து போனார். ஐஏஎஸ் அதிகாரியைப் போலவே அலுவலகத்தில் இருப்பது, அரசு அலுவலகங்களில் சோதனைக்குச் செல்வது என முழுக்கை மேலாடையுடன் பல போலியான புகைப்படங்களை எடுத்து, அதை சோசியல் மீடியாவில் அப்லோடு செய்து நம்ப வைத்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அபிஷேக்கிடம் தான் ஒரு இலவச மருத்துவமனை கட்ட உள்ளேன். அதற்காக ஒரு 40 லட்ச ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது. தயார் செய்து கொடுங்கள். நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன் என அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும் கணவனின் தந்தை பெயரில் இருக்கும் நிலத்தை ஒன்றையும் எழுதி கொடுக்கச் சொல்லி கேட்டதாக தெரிகிறது. இந்த மெகா மோசடியால் உடைந்துபோன அபிஷேக் பரேலியின் ஃபரித்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை சம்பவத்தைக் கூறி புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகளுக்கு சாதனாவின் சீட்டிங் வேலை உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து கலக்கல் சாதனா மற்றும் அவரது தந்தை நரேந்திர பால் சிங், சகோதரர் சூர்யா பிரதாப் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். விசாரணையில் சிக்கியது தெரிந்து உடனே சாதனா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் தான் தனிப்படை அமைத்துத் தேடி வந்த அதிகாரிகளிடம் சாதனா வசமாகச் சிக்கினார். அவரை கைது செய்து இதுவரை எத்தனை பேரிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கல்யாண மோசடியில் ஈடுபட்டுள்ளார்? எவ்வளவு லட்ச ரூபாய் சுருட்டியுள்ளார் என விசாரித்து வருகின்றனர். அதில் மேலும் பல திடுக்கிடும் கல்யாண சீட்டிங் வேலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


