அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயின் புகை பரவுவதற்கு கனடாவே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மாசுகளைக் கையாள்வதற்கான கணக்கிட முடியாத செலவினங்களை, கனடியப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள சுங்கவரிகளுடன் கூடுதலாகச் சேர்க்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கனடாவில் ஏற்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து எழும் அடர்ந்த புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கனடாவின் திட்டமிட்ட அலட்சியம்
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முரண்பாடான உறவைக் கொண்டுள்ள ட்ரம்ப், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிலைமை குறித்து கனடா என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பதை அறிய அவரைத் தொலைபேசியில் அழைக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

அத்தோடு, கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்காததால், அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற காற்று தேவையற்ற முறையில் அமெரிக்காவை ஆக்கிரமிப்பதாகவும், இது கனடாவின் திட்டமிட்ட அலட்சியம் என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் விமர்சித்துள்ளார்.
12 பில்லியன் கனடிய டொலர்கள்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள கனடாவின் அவசரகால மேலாண்மை மற்றும் சமூக மீள்திறன் அமைச்சர் எலினோர் ஓல்செவ்ஸ்கி, வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் நோக்கில் வன நிலைத்தன்மை மற்றும் தீ தடுப்பிற்காக 2020 ஆம் ஆண்டு முதல் தங்களது அரசாங்கம் 12 பில்லியன் கனடிய டொலர்களை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லை இருபுறமும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்க-கனடா கூட்டுறவின் நீண்டகால வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

