கடந்த ஜூலை 3ஆம் திகதி மேற்படி பாடசாலை வளாகத்துக்குள் சுமார் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. குறித்த கார் அந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
குருநாகலில் உள்ள ஒரு பாடசாலையில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஜூலை 3ஆம் திகதி மேற்படி பாடசாலை வளாகத்துக்குள் சுமார் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. குறித்த கார் அந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
அன்று பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றின் பின்னர், ஆசிரியர் தனது காரை நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றபோது கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதே பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது சிறுவன் ஒருவனே காருக்குத் தீ வைத்ததாக அந்த ஆசிரியர் முறைப்பாடு அளித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில் சிறுவன் காரின் அருகில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், அந்தச் சிறுவன் தான் காருக்குத் தீ வைத்தான் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய நேரடிச் சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கார் தீப்பிடித்தமைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அரச பகுப்பாய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த நிபுணத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

