சீனா டூ சென்னை.. 2020க்கு பின் வரும் முதல் சீன முதலீடு, அதுவும் சென்னையில்.. கெத்து காட்டும் தமிழ்நாடு!
இந்திய துறையில் சீனா தொடர்புடைய முதலீடுகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக இருந்த தடை இப்போது மெல்ல தளர்ந்து வருவதற்கான சிக்னல் தென்படுகிறது.
இதன் மூலம், முதல் பெரிய முதலீடாக, உலகளாவிய ஹைப்ரிட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Horse Powertrain Ltd., சென்னை ஓரகடத்தில் உள்ள ரெனால்ட் தொழிற்சாலையில் 370 மில்லியன் டாலர் முதலீடு செய்ய அனுமதி பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் சீனா தொடர்புடைய கூடிய முதல் பெரிய உற்பத்தி முதலீடாக பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடு மிகவும் ஸ்பெஷல், இந்தியாவில் சீன முதலீடுகளுக்கு பெரும் தடையும், கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், 2020 கல்வான் எல்லை பிரச்சனைக்கு பின்பு இந்தியாவில் முதலீடு வருகிறது என்றால் அது இதுதான். இதற்கு முன்பு JSW குழுமம் சீனாவின் SIAC மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்கியது, ஆனால் சீனா இதில் முதலீடு செய்யவில்லை.
இந்த புதிய முதலீடு ரெனால்ட் நிறுவனத்தின் சென்னை ஓரகடம் தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். Horse Powertrain என்ற நிறுவனம் 2024-இல் தொடங்கப்பட்ட லண்டனை தலைமையகமாக கொண்ட கூட்டு நிறுவனம்.
இந்நிறுவனத்தில் சீனாவின் Zhejiang Geely Holding Group 45% பங்கு வைத்திருக்கிறது. ரெனால்ட் 45% பங்கும், சவுதி அரேபியாவின் Saudi Aramco 10% பங்கும் வைத்து இயங்கி வரும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்த 370 மில்லியன் டாலர் முதலீட்டு திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, மேம்பட்ட பவர்ட்ரெயின் மற்றும் என்ஜின் உற்பத்தியை மொத்தமாக தமிழ்நாட்டை மையமாக கொண்டு, நாடு முழுவதும் விற்கப்படுகிறது.
ஹைப்ரிட் தொழில்நுட்ப உற்பத்தி
இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் இன்ஜின்கள், பெட்ரோல், டீசல் எரிபொருள் இன்ஜின்களுடன் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பேட்டரிகளை இணைத்து செயல்படும் ஸ்ட்ராங் – ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இன்ஜின் ஆகும்.
சென்னையில் தயாரிக்கப்படும் என்ஜின்கள் முதலில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய சந்தைக்கான புதிய மாடல்களுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக, எதிர்வரும் Renault Duster Hybrid மாடலுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்தியாவின் மற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
மற்ற நிறுவனங்களுக்கும் வழங்க திட்டம்
Horse Powertrain நிறுவனம், சென்னையில் தயாரிக்கப்படும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள பிற வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்குவது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த தொழில்நுட்பம் இந்திய சந்தையில் அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த முதலீட்டு அனுமதி, இந்திய அரசு மார்ச் மாதம் எடுத்த முக்கிய கொள்கை முடிவின் பின்னர் வந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கல்வான் எல்லை மோதலுக்குப் பிறகு, எல்லை நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு, இப்போது முதல் முறையாக சீனா தொடர்புடைய பெரிய அளவிலான உற்பத்தி முதலீடு அனுமதிக்கப்பட உள்ளது.

