மலாக்கா:
மலாக்கா, ஆயர் லேலே (Ayer Leleh) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், 28 வயதுடைய முடி திருத்தும் தொழிலாளி (Tukang gunting rambut) ஒருவர் கார் மோதி, சுமார் 25 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், அந்த இளைஞர் தலை மற்றும் உடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்விபத்து குறித்து மலாக்கா தெங்கா மாவட்ட தற்காலிக போலீஸ் சூப்பரிண்டெண்டன் ஹலிம் அபாஸ் கூறுகையில், முதற்கட்ட விசாரணையின்படி, மரணமடைந்த இளைஞர் தனது ‘ஹோண்டா RSX 150’ ரக மோட்டார் சைக்கிளில் புக்கிட் சீனாவிலிருந்து செமாபோக் (Semabok) நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
“அதே திசையில் பின்னால் புக்கிட் செரிண்டிட்டில் இருந்து 64 வயது முதியவர் ஒருவர் ஓட்டி வந்த ‘Omoda 9’ ரக கார், ஆயர் லேலே ரவுண்டானாவை (Bulatan) நெருங்கியபோது, தனது காரின் வலது பக்கத்தில் மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்ததை கவனிக்கத் தவறியுள்ளார். இதனால் எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞரை கார் சுமார் 25 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது,” என்று ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.
இந்தக் கொடூர விபத்தில் காரை ஓட்டி வந்த 64 வயது முதியவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். எனினும், விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சொன்னார்.
பலியான இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் அடுத்தகட்ட ஆய்விற்காக அலோர் காஜாவில் உள்ள புஸ்பாகோம் (Puspakom) வாகனப் சோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்விபத்து குறித்து, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக, சாலை போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




