Last Updated:
அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் இந்தியாவின் மீதும், பிரதமர் மோடி மீதும் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது
பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களுக்கும் இடையிலான மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களைத் தாண்டி, இரு பெரும் ஜனநாயக நாடுகளின் உறவை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்தது. இக்கூட்டத்திற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 அவுட்ரீச் நிகழ்வில் இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி தங்களது வரவேற்பைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப் “இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எங்களுக்கிடையே முறையான எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் ஏதும் தற்போதைக்கு இல்லை என்றாலும், இந்தியா மீது ஏதேனும் ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு உதவ அமெரிக்கா நிச்சயமாக முன்னிற்கும்” என்று அதிரடியாக அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா இருக்கும் வரை அமெரிக்கா எப்போதும் டெல்லியின் பக்கபலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். “பிரதமர் மோடி இந்தியாவின் தலைவராக இருக்கும் போது, அந்த நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் நாங்கள் அங்கு இருப்போம். ஒருவேளை புதிய தலைவர் யாராவது வந்தால் அது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால், மோடி தலைவராக இருக்கும் வரை அமெரிக்காவின் உதவி நிச்சயம் உண்டு. நான் அதிபராக இருக்கும் வரை, வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த நண்பன் இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் இந்தியாவின் மீதும், பிரதமர் மோடி மீதும் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
“இந்தியா மீது யார் கை வைத்தாலும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்!” – மோடி முன்னிலையில் ட்ரம்ப் அறிவிப்பு!


