Last Updated:
ஒருகாலத்தில் இந்தியாவை ‘பாம்பு பிடிப்பவர்களின் நாடு’ (snake charmers) என்று உலகம் பழங்காலக் கண்ணோட்டத்தில் பார்த்தது
வரும் ஜூன் 10-ம் தேதி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல். தொடர்ந்து அதிக காலம் பதவி வகித்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக முறியடிக்கிறார். இந்த சாதனை வெறும் நாட்காட்டியோடு நின்றுவிடாமல் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பிலேயே நடந்த ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியாகும்.
அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவு: சுதந்திரத்திற்குப் பிறகான நேருவின் காலகட்டத்தில், நீண்ட காலத் திட்டமிடல் மற்றும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் நிர்வாகம் இயங்கியது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்த நிர்வாக முறை முழுமையாக ‘டிஜிட்டல்’ மயமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வெறும் வார்த்தைகளாகவும் சித்தாந்தங்களாகவும் இருந்த நலத்திட்டங்கள் இன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு துல்லியமாக மக்களைச் சென்றடைகின்றன. இதன் மூலம் அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவே அடியோடு மாறிவிட்டது
தொழில்நுட்பமே பிரதானம்: முன்பெல்லாம் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அதிகாரிகளின் ஒப்புதலும், நீண்ட நடைமுறைகளும் தேவைப்பட்டன. இதனால் திட்டங்கள் தாமதமாவதும், இடையில் கசிவுகள் (leakages) ஏற்படுவதும் சாதாரண ஒரு விஷயமாகவே இருந்தது. ஆனால், இன்றைய நிர்வாக முறை ‘தொழில்நுட்பமே பிரதானம்’ என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டு, இடைத்தரகர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிட்டது. அடிப்படைத் தேவைகளை ஏதோ அரசியல் சலுகையாகப் பார்க்காமல், அதை நேரடியாகவும் குறித்த நேரத்திலும் பயனாளிகளிடம் சேர்க்கும் ஒரு புதிய கலாச்சாரம் தற்போது உருவாகியுள்ளது.
இந்த மாபெரும் மாற்றத்தின் ஆணிவேராக இருப்பது ‘டிஜிட்டல் அதிகாரம்’ மற்றும் நிதி உள்ளடக்கம் தான் . ஜன் தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பை உள்ளடக்கிய ‘JAM’ கட்டமைப்பு, மற்றும் நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) போன்றவற்றால், அரசு வழங்கும் நிதி எந்தச் சிக்கலுமின்றி நொடிப்பொழுதில் மக்களின் வங்கிக் கணக்குகளில் விழுகிறது. இதோடு சேர்த்து, கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள் அமைப்பது, சமையல் கேஸ் இணைப்பு மற்றும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது என அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை உறுதி செய்யும் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன . ஒவ்வொரு குடும்பத்திற்கும் இப்படி அடிப்படை வசதிகளை உருவாக்குவதன் மூலம், அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும்.
இந்தியாவின் ஆற்றல் உலகம் முழுவதையும் வசீகரிக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் பிம்பமும் அடையாளமும் மாறிவருகிறது. வெளிநாட்டவர்கள் ஒரு காலத்தில் இந்தியாவை வெறும் ‘பாம்பு பிடிப்பவர்களின் தேசமாகத்’ (snake charmers) தான் கிண்டலாகப் பார்த்து வந்தார்கள். ஆனால், இப்போது நிலைமையே வேறு; கம்ப்யூட்டர் ‘மவுஸ்’ பிடிப்பவர்களின் நாடாக (mouse charmers) இந்தியா விஸ்வரூபம் எடுத்திருப்பதைப் பிரதமர் மோடி ஒருமுறை சுட்டிக்காட்டினார். நமது பிரம்மாண்டமான டிஜிட்டல் கட்டமைப்பு, நொடிப்பொழுதில் நடக்கும் கோடிக்கணக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகள், மலைக்க வைக்கும் ஐடி துறையின் வளர்ச்சி என எல்லாமே அவர் சொன்னதைத்தான் இன்று கண்முன் காட்டுகின்றன.
நேருவின் சாதனையை மோடி கடக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், அரசின் பழைய கட்டுப்பாட்டு முறைகளிலிருந்து விடுபட்டு, தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் இந்த வேகமான நிர்வாக முறைதான் 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.


