கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக விவரித்த முதல்வர் விஜய், இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றங்களை சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், அவர்களின் துயரத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், இந்தச் சம்பவம் குறித்து விரைவான விசாரணையை மேற்கொண்டு, உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்றும், அதற்கான அனைத்து உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

