Last Updated:
உக்ரைன் மீதான போரின் போது ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கிய முக்கிய நாடாக இந்தியா இருந்தது என மார்கோ ரூபியோ தெரவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் தொடர்பான விவகாரம் இந்தியாவை மட்டும் குறிவைத்தது அல்ல என்றும் உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவுக்கு பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் பகுதியாகவே அது இருந்தது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிஎன்என் நியூஸ்18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் டிரம்ப் சார்பில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிஎன்என் நியூஸ்18-க்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் குவாட் உச்சி மாநாடு, ஈரான் போர், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது விவகாரங்கள் குறித்து பேசினார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்க விதித்த தடைகள் இந்தியாவை மட்டும் குறிவைத்தது அல்ல. உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவுக்கு பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் பகுதியாகவே அது இருந்தது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மார்கோ ரூபியோ, உக்ரைன் மீதான போரின் போது ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கிய முக்கிய நாடாக இந்தியா இருந்தது. உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரவே அமெரிக்க முயற்சி செய்து வருகிறது. இது இந்தியாவை குறிவைப்பது அல்ல. அதேசமயம், இந்த விவகாரத்தை சமாளிக்கும் போது இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை மேலும் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியையும் நாம் பார்த்தோம் என்று தெரிவித்தார்.
ஈரான் உடனான போர் குறித்தும் மார்கோ ரூபியோ, எண்ணெய் விலை உயர்வதற்கான காரணம், ஹார்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகவும் குற்றச்செயலாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈரான் முயற்சிப்பதுதான். தங்களது கட்டணத்தை செலுத்தாத மற்றும் அவர்கள் கூறும் விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக கப்பல்களை மூழ்கடிப்போம் என்று ஈரான் மிரட்டுகிறது என்றார்.
ஈரான் உடனான பிரச்சினைக்கு அமைதியான தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அதைவிட முக்கியமானது, ஈரானின் அணு அச்சுறுத்தல். அதற்கும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
“இந்தியாவை ஒரு போதும் குறிவைக்கவில்லை” ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் குறித்து மார்கோ ரூபியோ விளக்கம்


