கோலாலம்பூர்:
ஜூனியர் மருத்துவர்கள் அல்லது பயிற்சி மருத்துவர்களின் (House Officers) நலனைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்கள் வாரத்திற்கு 60 முதல் 62 மணிநேரம் மட்டுமே பணிபுரிவதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒரு பயிற்சி மருத்துவரின் சராசரி பணி நேரம் வாரத்திற்கு 62 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகள் தங்களது பணி நேர அட்டவணையை மூன்று முக்கிய ஷிப்டுகளாக (காலை, மாலை மற்றும் இரவு) பிரிக்க வேண்டும்.
இந்த முறையை இரண்டு ஷிப்டுகளாகக் குறைப்பதற்கோ அல்லது பழைய ‘ஆன்-கால்’ (On-call) முறைக்கு மாறுவதற்கோ கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என்று, சுகாதாரத்துறை இயக்குனர் டத்தோ டாக்டர் மகாதிர் அபு வஹாப் கூறியுள்ளார்.
பயிற்சி மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், அவர்களது நலனில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. காலை நேரப் பணியை முடித்த ஒரு ஜூனியர் மருத்துவருக்குப் பதிலாக, மாலை மற்றும் இரவு நேரப் பணிகளை மூத்த மருத்துவ அதிகாரிகளோ (MO) அல்லது நிபுணர்களோ (Specialists) பொறுப்பேற்று நடத்த வேண்டும்.
பயிற்சி மருத்துவர்கள் அலுவலக நேரங்களில் அதிக நேரம் செலவிடுவதை உறுதி செய்யும் வகையில் அட்டவணை இருக்க வேண்டும். இது அவர்கள் மருத்துவ நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் அனுபவம் பெறவும் உதவும்.
ஜூனியர் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு 25 நாட்கள் வருடார்ந்த விடுப்பு (Annual Leave) உண்டு. இது தவிர மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவையும் அவர்களுக்குப் பொருந்தும்.
நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவப் பயிற்சியின் தரத்தைப் பாதிக்காமல், ஜூனியர் மருத்துவர்களின் ஓய்வு மற்றும் மன நலனை உறுதி செய்வதே இந்த அதிரடி மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழ்வான பணி முறையில் நிலவிய குழப்பங்களைத் தீர்க்க இந்த புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




