Last Updated:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த 2026 தேர்தலில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவு நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் திட்டமிடப்பட்டு, நான்கு மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிவுபெற்றுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நடந்த ஒரே கட்ட வாக்குப் பதிவில் இதுவரை 85.03 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் 92.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல்களில், 2026 தேர்தலில்தான் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் முழுமையான வாக்கு சதவிகிதம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என பல்வேறு பிரிவுகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது எனவும் தகவல் சொல்லப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட். சுதந்திரத்திற்குப் பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Elections 2026 | வரலாற்றில் முதல்முறை.. தமிழ்நாடு, மேற்குவங்கம் வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!


