மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தாலும், தொகுதி மறுவரையறை, அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்திய அரசியலமைப்பின் 369வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 சதவீத ஆதரவு அல்லது குறிப்பிட்ட அவையில் உள்ள 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்
அதன்படி, மக்களவையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ள நிலையில், 71 ஆதரவு வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேபோல் மாநிலங்களவையில் மொத்தம் 164 ஆதரவு வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 141 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கும் 23 ஆதரவு வாக்குகளை திரட்ட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
அதேநேரம், மசோதா தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் திடீரென வெளிநடப்பு செய்தாலோ, அல்லது ஆதரவாக வாக்களித்தாலோ நிலைமை பாஜக வசம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது என எச்சரித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி மறுவரையறை மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு எதிராக வாக்களிக்க இந்திய கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்ததாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். அதேபோல், தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தொகுதி மறுவரையறை மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சரிசமமாக 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி மறுவரையறை செய்வதில் தற்போது உள்ள விகிதாச்சாரமே தொடரும் எனவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், 2011 மக்கள் தொகையில் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மொத்த தொகுதிகள் 49ஆகவும் அல்லது மத்திய அரசு தரப்பு தகவல்படி விகிதாசார அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால் 59 தொகுதிகளாக அதிரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் 28 மக்களவை இடங்களை கொண்ட கர்நாடகாவில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் 33 இடங்களும், மத்திய அரசின் விகிதாசார அடிப்படையில் 41 தொகுதிகளாகவும் உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவை பொறுத்தவரை 20 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 23 இடங்களாகவும், விகிதாச்சார அடிப்படையில் 30ஆகவும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானாவிலும் தொகுதிகளின் எண்ணிக்கை உயருமெனக் கூறப்படுகிறது.

