Last Updated:
கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி வரிசையில் உலகக் கோப்பையை முத்தமிட்ட கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தான். ஒருநாள் போட்டிகளை போலவே, டி20 போட்டிகளிலும் ஹர்மன்பிரீத் கவுரின் சாதனைகள் ஏராளம்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், 2009-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ஹர்மன்பிரீத், முதன்முதலில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியது மிகவும் எதிர்பாராத ஒரு தருணம். 2012-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பையின் போது, அப்போதைய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் துணை கேப்டன் ஜூலன் கோசாமி ஆகியோர் காயத்தால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் விலகினர். இதனால், ஹர்மன்பிரீத் கவுரிடம் தற்காலிக கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
தனது முதல் கேப்டன்சி பொறுப்பிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான அந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அணியை வெற்றிகரமாக முன்னின்று நடத்தி இந்தியாவிற்குக் கோப்பையை வென்று தந்தார். பின்னர் 2016-ஆம் ஆண்டு இந்திய டி20 அணிக்கு கேப்டன் ஆனார். மித்தாலி ராஜ் ஓய்வுக்கு பிறகு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்தியாவின் நீண்ட கால ஏக்கத்தை போக்கினார்.
கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி வரிசையில் உலகக் கோப்பையை முத்தமிட்ட கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தான். ஒருநாள் போட்டிகளை போலவே, டி20 போட்டிகளிலும் ஹர்மன்பிரீத் கவுரின் சாதனைகள் ஏராளம். 2018-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான அணி அரையிறுதி வரை முன்னேறியது. 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று மாபெரும் சாதனை படைத்தது. கோப்பையைத் தவறவிட்டாலும், உலக அரங்கில் இந்திய அணி எந்த அணிக்கும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்த தொடர் இது.
2023-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரிலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதித்தது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்ட முதல் மற்றும் ஒரே வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்மன்பிரீத் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 155 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து, 93 வெற்றிகளைத் தேடித்தந்து, சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டில் மிக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களில் ஒருவராகவும் ஜொலித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற கேப்டனும் ஹர்மன்பிரீத் தான். ஆசிய கோப்பையை 4 முறை வென்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார்.
ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து அபார வெற்றி பெற்று இந்திய அணி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. தனது விலகலை இன்ஸ்டா பதவின் மூலம் தெரிவித்துள்ள ஹர்மன்பிரீத், தான் எடுத்த முடிவு எளிதானது அல்ல, அதில் பல வருட நினைவுகள், தியாகங்கள் மற்றும் உணர்வுகள் நிறைந்துள்ளன என கூறியுள்ளார்.
கேப்டன் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டாலும் சாதாரண வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட்டை ரசித்து ஆடும் தனது பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி தற்போது மிகவும் வலுவான இடத்தில் உள்ளது என்றும் தனது கடமையை முழுமையாகச் செய்து முடித்துவிட்டேன் என்றும் ஹர்மன்பிரீத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


