அதேவேளையில், 8-வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அண்மையில் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். 8-வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு, அதன் நடைமுறைகள், ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள், ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (fitment factor) மற்றும் குடும்ப அலகு (family unit) உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அமைச்சரின் தகவலின்படி, 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நவம்பர் 3, 2025 அன்று வெளியிட்டது. அதே அறிவிப்பில், ஊதியக் குழு தனது சொந்தச் செயல்பாட்டு முறையை வகுத்துக்கொள்ளும் சுதந்திரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, எந்தெந்த விவகாரங்களை எந்த வரிசையில் ஆய்வு செய்வது, யாருடன் கலந்தாலோசிப்பது மற்றும் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது ஆகியவற்றை அந்தக் குழுவே தீர்மானிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.


