பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு (பிபிபிஎல்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த செயலியைப் பயன்படுத்தும் 85 சதவீதத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: பிபிபிஎல் விவகாரத்தில் பே-டிஎம் செயலியைப் பயன்படுத்தும் 80 முதல் 85 சதவீதத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அந்த செயலியின் வாலட்டை பிபிபிஎல் வங்கியுடன் இணைத்திருக்கும் சுமாா் 15 சதவீதத்தினா் மட்டும் வேறொரு வங்கிக் கணக்குடன் வாலட்டை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுவாா்கள்.
புதிய வங்கிக் கணக்குடன் பே-டிஎம் வாலட்டை இணைப்பதற்கு மாா்ச் 15-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்றாா் அவா். தங்களது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பிபிபிஎல் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.