8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! டபுளாகுமா அடிப்படைச் சம்பளம்?
மத்திய அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியதாரர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 8-வது ஊதியக் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 18 மாதங்களில் 10 மாதங்கள் கடந்து விட்டன. 8-வது ஊதியக் குழு 2025-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அன்று நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியக் குழு அமைக்கப்படும். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஊதியம் மற்றும் இதர விஷயங்களை அரசு மறு பரிசீலனை செய்து அறிவிக்கும்.
எட்டாவது ஊதியக் குழு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் உள்ளது. இந்த முறை ஃபிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு இருக்கப் போகிறது?. 6-வது ஊதியக் குழுவில் அரசு ஃபிட்மென்ட் ஃபேக்டரை 1.86 என்றும், 7-வது ஊதியக் குழுவில் 2.57 என்றும் நிர்ணயித்தது.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் என்ன?: ஏராளமான அரசு துறைகள் உள்ளன. அதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படும் போதெல்லாம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற சமயத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சம்பளத்தை கணக்கிட முடியாது. இதை கணக்கிடுவதற்காக அரசு ஒரு நம்பரை நிர்ணயம் செய்யும். அதுதான் இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர்.
உதாரணமாக 6-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டரை 1.86 என்று அரசு நிர்ணயித்தது. ஒருவருடைய அடிப்படை சம்பளத்தை இந்த நம்பரைக் கொண்டு பெருக்க வேண்டும். அதாவது ஒருவர் ரூ.10,000 சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றால்.. புதிய சம்பளத்தை கணக்கிட இந்த பிட்மென்ட் ஃபேக்டரோடு பழைய சம்பளத்தை பெருக்க வேண்டும். 10,000X1.86 = ரூ.18,600. 6-வது ஊதியக் குழுவின் அறிவிப்பிற்குப் பிறகு ரூ.10,000 சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ.18,600 ஆக அடிப்படை சம்பளம் உயர்ந்திருக்கும்.
இதே போல் 8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு நிர்ணயிக்கப்பட இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த முறை ஃபிட்மென்ட் ஃபேக்டரை 3.0 முதல் 4.0 வரை நிர்ணயிக்க ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விகிதம் உறுதிப்படுத்தப்படவில்லை.
வெவ்வேறு சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இந்த முறை 2.75 முதல் 3.5 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர் நிர்ணயிக்கப்பட்டால் அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போம்.
| பே லெவல் | அடிப்படை சம்பளம் | 2.75 ஃபிட்மென்ட் ஃபேக்டரைக் கொண்டு கணக்கிடப்பட்ட அடிப்படைச் சம்பளம் | 3.5 ஃபிட்மென்ட் ஃபேக்டரைக் கொண்டு கணக்கிடப்பட்ட அடிப்படைச் சம்பளம் |
|---|---|---|---|
| லெவல் 1 | ரூ.18,000 | ரூ.49,500 | ரூ.63,000 |
| லெவல் 2 | ரூ.19,900 | ரூ.54,725 | ரூ.69,650 |
| லெவல் 3 | ரூ.21,700 | ரூ.59,675 | ரூ.75,950 |
| லெவல் 4 | ரூ.25,500 | ரூ.70,125 | ரூ.89,250 |
| லெவல் 5 | ரூ.29,200 | ரூ.80,300 | ரூ.1,02,200 |
| லெவல் 6 | ரூ.35,400 | ரூ.97,350 | ரூ.1,23,900 |
| லெவல் 7 | ரூ.44,900 | ரூ.1,23,475 | ரூ.1,57,150 |
| லெவல் 10 | ரூ.56,100 | ரூ.1,54,275 | ரூ.1,96,350 |
| லெவல் 13 | ரூ.1,23,100 | ரூ.3,38,525 | ரூ.4,30,850 |
| லெவல் 18 | ரூ.2,50,000 | ரூ.6,87,500 | ரூ.8,75,000 |
8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.75 -ஆக நிர்ணயிக்கப்பட்டால் ரூ.18,000 சம்பளம் பெறும் ஒருவர் ரூ.49500 சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல 3.5 ஆக நிர்ணயிக்கப்பட்டால் ரூ.18000 அடிப்படை சம்பளம் பெறும் ஒருவரின் ஊதியம் ரூ.63,000 ஆக உயரும். இவை பல ஊழியர் சங்கங்களின் பரிந்துரை அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் கணக்கீடு மட்டுமே. இறுதி முடிவுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு வெளியாகும்.
இதர படிகள் எல்லாம் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே எப்போது எல்லாம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் படி மற்றும் அடிப்படை சம்பளமும் சேர்ந்து அதிகரிக்கும். அரசின் இறுதி முடிவுகளைத் தெரிந்து கொள்ள இறுதி அறிக்கை வெளியாகும் நாள் வரை காத்திருக்க வேண்டும்.

