பாசீர் மாஸ்:
கிளந்தான், புனுட் சுசு (Bunut Susu) பகுதியில் முறையான அனுமதியின்றி 13 மாடுகளை லாரியில் கடத்திச் சென்ற இரண்டு இளைஞர்களைப் பொது நடவடிக்கைப்படை (GOF) காவல்துறையினர் கைது செய்தனர். வெறும் 70 ரிங்கிட் கூலிக்காக இவர்கள் இக்கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில், ‘ஓப் தாரிங் வாவாசான்’ (Op Taring Wawasan) நடவடிக்கையின் கீழ் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கம்பங் மனான் பகுதியில் ஒரு லோரியை மறித்துச் சோதனையிட்டனர்.
குறித்த லோரியில் இருந்த 13 மாடுகளுக்கு உரிய கடத்தல் ஆவணங்களோ அல்லது போக்குவரத்து அனுமதியோ இல்லை. இதையடுத்து, 22 மற்றும் 25 வயதுடைய லோரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 13 மாடுகளின் மதிப்பு சுமார் 40,000 ரிங்கிட் ஆகும். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 100,000 ரிங்கிட் மதிப்புள்ள லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 140,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த மாடுகள் தாய்லாந்திலிருந்து சட்டவிரோதப் படகுத்துறை வழியாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கம்போங் பாலாஸ் மேராவிலிருந்து கோத்தா பாருவில் உள்ள ஒருவருக்கு இந்த மாடுகளைக் கொண்டு சேர்க்க, தலா 70 ரிங்கிட் மட்டுமே கூலியாகப் பெற்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த வழக்கு விலங்குகள் சட்டம் 1953, பிரிவு 36(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் மற்றும் லோரி மேலதிக நடவடிக்கைக்காகக் கிளந்தான் கால்நடை மருத்துவத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் இத்தகைய சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தென்கிழக்கு பிரிகேட் தளபதி அகமட் ராட்ஸி ஹுசைன் தெரிவித்தார்.




