Last Updated:
திருமணங்கள், குழந்தை பெறுதல் ஆகியவை குறைந்து வரும் நிலையில் விவாகரத்துக்கள் தாறுமாறாக அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகின்றன.
6 மாதங்களில் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் வேலை கிடையாது என எச்சரித்துள்ளது தனியார் நிறுவனம் ஒன்று.
இந்தியாவுக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகையை கொண்டது சீனா. ஆனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதாக அரசு எச்சரித்து வருகிறது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவும் காணப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை நிலவி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த 1980-ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு கொண்டு வந்த ஒரு குழந்தை கொள்கை தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். 2015-ஆம் ஆண்டு விழித்துக்கொண்ட சீன அரசு, மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதித்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு குழந்தை கொள்கையையே பின்பற்றி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், அங்கு திருமணங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. கடந்தாண்டு சுமார் 60 லட்சம் தம்பதிகள் மட்டுமே தங்கள் திருமணங்களைப் பதிவு செய்துள்ளனர். இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.5 சதவீதம் குறைவாகும். சீனாவில் 1986 முதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் சூழலில், 2024ல் தான் மிகக் குறைந்த திருமணங்கள் பதிவாகியுள்ளன. அப்படியே திருமணம் செய்துக்கொண்டாலும், இளம் தம்பதியினர் “say no to babies” என்ற கலாசாரத்தை பின்பற்றுகின்றனர்.
திருமணங்கள், குழந்தை பெறுதல் ஆகியவை குறைந்து வரும் நிலையில் விவாகரத்துக்கள் தாறுமாறாக அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் சீனா அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகிறது. அதில் ஒன்று தான் திருமண வயதை 18-ஆக குறைப்பது. தற்போது சீனாவில் திருமண வயது பெண்களுக்கு 20-ஆகவும் ஆண்களுக்கு 22-ஆகவும் உள்ளது. அரசு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களோ அதற்கு ஒருபடி மேலே சென்றுள்ளன.
குறிப்பாக, கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டியன் கெமிக்கல் குரூப் என்ற நிறுவனம், தங்களது பணியாளர்கள் 6 மாதங்களில் திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. அங்கு பணிபுரியும் திருமணம் ஆகாத 28 முதல் 58 வயதானவர்கள் 1200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.
அதிலும் மார்ச் மாதத்திற்குள் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், சுய விமர்சன கடிதம் கொடுக்க வேண்டும், ஜூலை இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் நிறுவனம் மதிப்பீடு செய்யும், செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால், பணியிலிருந்து துரத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால், “Relationship Status” என்பது தனி உரிமை என கூறி வரும் இளைஞர்கள் சீனாவில் இருக்கவே முடியாது போலும்…
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 26, 2025 9:00 AM IST
“6 மாதத்திற்குள் திருமணம்… இல்லாவிட்டால் வேலை இல்லை” – ஊழியர்களை எச்சரித்த நிறுவனம்.. என்ன காரணம்?


