Last Updated:
இந்த விடுதலையின் பின்னணியில் எந்தவொரு கைதிகள் பரிமாற்றமும் (Swap) நடைபெறவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்களின் கோரிக்கையை “நியாயமற்றது” மற்றும் “அறிவீனம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 74 வயதான அமெரிக்கக் குடிமகன் ஸ்டீபன் ஹப்பார்ட்டை நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் ஒரு அமெரிக்கக் குடிமகனை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டே, மற்றொரு புறம் அதே நாட்டின் மீது புதிய தடைகளை விதிப்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான 74 வயது ஸ்டீபன் ஹப்பார்ட், உக்ரைன் சார்பாகக் கூலிப்படையாகப் போரிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்புதான் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அமெரிக்காவிற்குத் திரும்பினார்.
வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தபோது பேசிய ஹப்பார்ட், சிறை அதிகாரிகளில் சிலர் தம்மிடம் பரிவோடு நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். மேலும், “மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி என்னை அழைத்துச் சென்று புதிய ஆடைகளை வழங்கி சிறை வாசலுக்கு வெளியே அழைத்து வந்தபோதுதான், நான் உண்மையிலேயே விடுவிக்கப்படுகிறேன் என்பதை நம்பினேன்; மற்றொரு ஆண்டு நான் சிறையில் இருந்திருந்தால் நிச்சயம் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்றும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.
ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) ஆகியோருக்கு இடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சந்திப்பின் போதே ஹப்பார்ட்டின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
இந்த விடுதலையின் பின்னணியில் எந்தவொரு கைதிகள் பரிமாற்றமும் (Swap) நடைபெறவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹப்பார்ட் பாதுகாப்பாகத் திரும்பிய பின்னரும் ரஷ்யா மீதான அந்தப் பொருளாதாரத் தடைகளை டிரம்ப் நிர்வாகம் மீண்டும் அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஷ்ய அரசின் முதலீட்டு நிதியத்தின் மீதான தடைகளை முழுமையாக நீக்குவது குறித்தும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

