Last Updated:
3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர் சிரமத்தைக் குறைக்க இன்று வங்கிகள் திறப்பு. 5 நாள் வேலை, சம ஊக்கத்தொகை கோரி 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம். ஏடிஎம், நெட் பேங்கிங் பயன்படுத்த அறிவுறுத்தல்.
வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் செயல்படுகின்றன.
வங்கி வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும், சமமான ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 18,000 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 3 நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு காந்தி ஜெயந்தி விடுமுறையும் வருவதால் பல கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு முந்தைய நாளான இன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்பட உள்ளன.
இது தொடர்பாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பணத் தேவைகளுக்கு தங்கள் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் இந்த மூன்று நாட்களில் ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


