26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!
தங்க நகைகளுக்கு பெயர்போன இந்தியாவில் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமான வர்த்தகம் பதிவாகியுள்ளது. உலக தங்க கவுன்சில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து உலக நாடுகளில் எவ்வளவு தங்க நகை விற்கப்பட்டு வருகிறது என்பதை கண்காணித்து வருகிறது, இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டில் தங்க நகைக்கான டிமாண்ட் வருடந்திர அடிப்படையில் 15 சதவீதம் குறைந்து வெறும் 75 டன் அளவிலான தங்க நகைகள் விற்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2000ல் இருந்து இது தான் மோசமான 2வது காலாண்டாகும். ஆனாலும் உலகளவில் அதிக தங்க நகை வாங்கும் நாடாக இந்தியா (27%) உள்ளது, சீனா 25 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.

இந்த மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணம் மோடி மக்களை அடுத்த ஒரு வருடத்திற்கு தங்க நகைகளை வாங்க வேண்டாம் என கூறியதும், அதனை தொடர்ந்து தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது தான்.
இவ்விரண்டின் காரணமாக இந்தியாவில் மொத்த தங்கத்திற்கான டிமாண்ட் இக்காலாண்டில் 6 சதவீதம் குறைந்து 131.4 டன்னாக குறைந்துள்ளது என உலக தங்க கவுன்சில் ரிப்போர்ட் கூறுகிறது.
வரி உயர்வால் விலை அதிகரித்து, விற்பனையும் குறைந்துள்ளது.. இதனால் ஒட்டுமொத்த தங்கம் வர்த்தக சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சரிவு தொடரும் என்பதாலேயே சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஜுவல்லரி நிறுவன பங்குகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
ஜூன் காலாண்டில் அட்சய திருதியை, திருமண சீசன் போன்ற காரணத்தால் விற்பனை ஓரளவுக்கு நகை கடைகள் பெற்றது, ஆனால் வரி விதிப்பின் தாக்கம் ஜூன் மாத இறுதியிலேயே தெரிய துவங்கியதால் செப்டம்பர் காலாண்டில் இதன் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டிசம்பர் காலாண்டில் பண்டிகை காலம், திருமண சீசன் என்பதால் மீண்டும் தங்க நகை விற்பனை உயர கூடும்.
இதேவேளையில் நகை கடைகள் தற்போது அதிகளவில் பழைய தங்கத்தை கொடுத்து புது நகையாக வாங்கும் பிரிவில் தான் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருவதால் நகை கடைகளின் லாப அளவுக்கு பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. மேலும் தங்கம் விலை வரியால் கூடுதலாக உயர்ந்துள்ளதால் பல வழிகளில் தங்கம் சந்தைக்கு வர துவங்கியுள்ளது எனவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வரி உயர்வுக்கு பின்பு இந்திய அமலாக்க துறை, ஏப்ரல் 1 முதல் மே 12 வரையிலான காலகட்டத்தில் பறிமுதல் செய்த தங்கத்தை விட மே 13 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரு மடங்கு தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் அரசு தரப்பில் பகிரப்பட்ட தரவுகளின்படி, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 86.16 கிலோவில் இருந்து 160.91 கிலோவாக உயர்ந்துள்ளது தெரிவித்துள்ளது.
